கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.
இதில் தொடக்கப் பள்ளியில் 97 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், தொடக்கப்பள்ளி கட்டிடம் 2017-ல் ஒக்கி புயலால் சேதமடைந்தது. ஆனால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அதே கட்டிடத்தில் வகுப்புகளை நடத்தி வந்தனர். மேலும், அந்தக் கட்டடத்தில் மாணவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை எனப் பெற்றோர்கள் பிரச்சனை எழுப்பியதால் கடந்த மார்ச் மாதம் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு அருகில் இருந்த இன்னொரு கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வந்தன.
இந்த நிலையில், அந்தக் கட்டிடமும் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதோடு மழை நீர் வகுப்பு அறையில் வழிகிறது. அதுபோல் கழிவறைகளும் இடிந்து கிடப்பதால் மாணவிகள் அங்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக பெற்றோர்களும் பள்ளி மேலாண்மை குழுவும் அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் மாணவர்களும் பள்ளிக்கு செல்வதை புறக்கணித்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு வந்த பாஜக மற்றும் காங்கிரசார் மாணவர்களுக்கு ஆதரவாக சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களும் கையில் பதாகையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த பள்ளி கல்வி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிக் கட்டிடம் மற்றும் கழிவறைகள் கட்டுவதற்கு ரூ.65 லட்சம் மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும், அதற்கான அனுமதி கிடைத்தவுடன் கட்டிடங்கள் கட்டுவதாகவும், தற்போது வகுப்புகள் நடைபெறுவதற்கு தற்காலிக வசதிகள் செய்து கொடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர்.