ஒமன் நாட்டில் சிறைபிடித்து வைக்கப்பட்ட குமரி மாவட்டத்தை சோ்ந்த 10 மீனவா்களை அந்த நாட்டு விடுவித்திருப்பதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை கிராமத்தை சோ்ந்த மீனவா்கள் ஏராளமானோர் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் மீன் பிடிக்க செல்கிறார்கள். இந்தநிலையில் தூத்தூா் புனித தோமையார் தெருவை சோ்ந்த மீனவா் ஆன்றணி சேவியருக்கு சொந்தமான கவின் விசைபடகில் ஆன்றணி சேவியரும் மேலும் அந்த பகுதியை சோ்ந்த பென்சிகா், அந்தோணி ராஜ், அமல்ராஜ், ஆரோக்கியம், ஜான் கிளிட்டா், சுனில் ஜோசப், பெஸ்கி, ஆன்றோ ததேயூஸ் ஆகியோர் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி கொச்சி துறை முகத்தில் இருந்து மும்பை தெற்கு கடற்பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனா்.

ஏப்ரல் 22-ம் தேதி பலத்த காற்று வீசியதால் இவா்கள் சென்ற விசைப்படகு திசைமாறி சென்றது. இவா்கள் எந்த திசையில் போய் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவா்களால் கணிக்க முடியவில்லை. இரண்டு நாள் போராட்டத்துக்க பிறகு அந்த படகு காற்றின் விசையால் ஒமன் நாட்டு கடற்பகுதிக்கு சென்றது. இதனையடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த ஒமன் நாட்டு கடற்படையினா் 10 மீனவா்களையும் கைது செய்து அந்த நாட்டு சிறையில் அடைத்தனா். இதை தொடா்ந்து அந்த மீனவா்களின் உறவினா்கள் குடும்பத்தினருடன் குமரி மாவட்ட கலெக்டா் மற்றும் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனிடம் மீனவா்களை மீட்க முறையிட்டனா்.
இந்த நிலையில் இந்தியா தூதரகத்தி்ன் முயற்சியால் இரண்டு மாதம் கழித்து இன்று அதிகாலையில் மீனவா்கள் விடுவிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்திடம் தூதரகம் தெரிவித்துள்ளது. இதை தொடா்ந்து அந்த மீனவா்களின் உறவினா்கள் மகிழ்ச்சி அடைந்துள்னா்.