வேலூர் மக்களவைத் தேர்தலில் ‘டூ மச்’ என்று சொல்லும் அளவுக்கு ஆளும் கட்சியினர் களப்பணியாற்றி வருகின்றனர், அவர்களின் மெனக்கெடல்களில் ஒன்றுதான், அமைச்சர் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் கே.டி.ஆர். உணவகம்.
பொதுவாக, தேர்தல் பணியாற்றும் கட்சியினருக்கு டீ-யிலிருந்து சாப்பாடு வரையிலும் சகலமும் கிடைக்கும். இரவு நேரத்தில் உற்சாகக் கவனிப்பும் நடக்கும். இதற்கான செலவுகளை, அந்தந்த ஏரியாவில் ‘இன்சார்ஜ்’ ஆக உள்ள அமைச்சரோ, எம்.எல்.ஏ.வோ, மாவட்டச் செயலாளரோ, வேறு முக்கிய நிர்வாகிகளோ பார்த்துக்கொள்வார்கள். எல்லா கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
வேலூர் மக்களவைத் தொகுதியில், கே.வி.குப்பம் பகுதியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ஆளும் கட்சியினர். இவர்களுக்காக, அந்த ஏரியாவில் அமைச்சர் பெயரில் ஒரு ஹோட்டலே ஆரம்பித்து மூன்று வேளையும் இலவசமாக சைவ, அசைவ உணவு பரிமாறுகின்றனர்.
அந்த ஓட்டலின் உரிமையாளர் என படத்தோடு சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனின் பெயரை போட்டிருந்ததால், அவரிடம் பேசினோம்.
“கண்ட கடையிலும் சாப்பிட்டு கட்சித் தொண்டர்கள் உடம்பைக் கெடுத்துக்கக் கூடாதுன்னுதான், நண்பர் ஒருவரின் ஓட்டலைப் பிடித்து அங்கே சாப்பாடு போடறோம். இதற்காக, சாத்தூரிலிருந்தே சமையல் ஆட்களைக் கூட்டி வந்திருக்கோம்.” என்றார்.
வயிற்றுக்குச் சோறு போட்டு வேலை வாங்குவதென்பது இதுதானோ?