கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஊனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது வீட்டின் அருகில் பழமையான பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் பழமையான ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் சிலையும், அம்மன் சிலையும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கோவிலில் இருந்த சாமி சிலைகள், கோவில் உண்டியல் மற்றும் பூஜை சாமான்கள் ஆகியற்றை கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சுப்ரமணியத்தின் பக்கத்து நிலத்தின் உரிமையாளரான சேகர் என்பவர் கிராமத்தில் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. இதன் காரணமாக அவரைப் பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், சேகர் நேற்று இரவு ஊத்தங்கரை பகுதியில் இருந்ததைக் கண்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சுப்பிரமணியத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த சுப்பிரமணியம் மற்றும் கிராம மக்கள், சேகரிடம் மிரட்டி கேட்டதில் உண்மையை ஒப்புக்கொண்டார். பிறகு கொள்ளையடித்த பொருட்கள் எங்கே எனக் கேட்டதற்கு சாமி சிலைகள் உட்பட அனைத்தும், மத்தூர் அடுத்த புளியான்டப்பட்டி கிராமத்தில் உள்ள அருணாச்சலம் மற்றும் கண்ணம்மாள் என்பவர்களின் வீட்டிலும் அதே பகுதியில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிலும் கொடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள், சேகரை அழைத்துக்கொண்டு கண்ணம்மாள் வீட்டிற்குச் சென்று பொருட்களைக் கேட்டுள்ளனர். அப்போது கண்ணம்மாளும், அவருடன் இருந்த பிரியா என்ற பெண்ணும் சேர்ந்து, சேகர் பொய் சொல்வதாகக் கூறி அவரைத் தாக்கியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து ஊர் பொதுமக்களும் சேகரை தாக்கியுள்ளனர். பிறகு சிலர் சென்று கண்ணம்மாளின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். சேகர் சொன்னபடி அவரது வீட்டில் எந்த பொருளும் இல்லை. அதேசமயம், கண்ணம்மாளின் மஞ்சள் தோட்டத்தில் ஒரு பையை எடுத்துள்ளனர். அதில் பூஜை பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் கிடந்துள்ளன.
அந்தப் பையை கைப்பற்றிய ஊர் மக்கள் பிறகு சாமி சிலைகள் குறித்து சேகரிடம் கேட்டுள்ளனர். அதற்குப் பதில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி மற்றும் சிலர் சேர்ந்து சேகரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், சேகர் பரிதாபமாகப் பலியானார்.
இதனைத் தொடர்ந்து சேகரின் மகள் முருகவள்ளி, ஊனாம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி உள்ளிட்ட ஏழு பேர்தான் தன் தந்தையை அடித்துக் கொன்றதாக ஊத்தங்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்குள் சுப்பிரமணி தலைமறைவானார். இந்தப் புகாரை ஏற்ற ஊத்தங்கரை காவல்துறையினர் சுப்பிரமணி உள்ளிட்ட ஏழு பேரைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்தனர். அவர்களின் தீவிர தேடுதல் வேட்டையில், சுப்பிரமணி, ஐயப்பன், கண்ணம்மாள், பிரியா ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அவர்களைச் சிறையில் அடைத்துள்ளனர்.