சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், மக்களைக் கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீள சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேபோல், கரோனா நிவாரணம் ரூபாய் 1,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூபாய் 2,500 வழங்கியுள்ளதால், தமிழக அரசுக்குக் கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் கடன் சுமை கடந்த 2016 - 2017 ஆம் நிதியாண்டில் ரூபாய் 2,52,431 கோடியாகவும், 2017 - 2018 நிதியாண்டில் ரூபாய் 3,14,366 கோடியாகவும், 2018 - 2019 ஆம் நிதியாண்டில் 3,55,844 கோடியாகவும், 2019 - 2020 ஆம் நிதியாண்டில் 3,97,495 கோடியாகவும், 2020 - 2021 ஆம் நிதியாண்டில் 4,56,000 கோடியாகவும் உள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டின் மூலம் தமிழக அரசின் கடன் தொகை ரூபாய் 5 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், இதன்காரணமாக கடன் சுமை, வட்டி என ஆண்டுதோறும் அதிகரிக்கும் சவால்களைச் சமாளிக்க வழி வகுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, கூட்டுறவு வங்கிகளில் ரூபாய் 12,110 கோடி பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்ய தமிழக அரசு அறிவித்திருந்தது. 15வது தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரான இதில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதையொட்டி, கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.