கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கோட்டையூரில் போலி மருத்துவர்கள் இருவர், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவருவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவருடைய உத்தரவின்பேரில், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி தலைமையில் மருத்துவக் குழுவினர், காவல்துறையினர் ஆகியோர் கோட்டையூரில் இரு நாட்களுக்கு முன்பு திடீர் ஆய்வு செய்தனர்.
அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 42) மற்றும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பருவனஹள்ளியைச் சேர்ந்த அங்கமுத்து ஆகிய இருவரும் எஸ்எஸ்எல்சி மட்டும் படித்துவிட்டு மருந்து கடை நடத்தி வருவதோடு, நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து, உடனடியாக ஆனந்தனை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது திடீரென்று அங்கமுத்து தப்பி ஓடிவிட்டார். அவர்கள் நடத்தி வந்த மருந்து கடையையும் மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கிருந்த மருந்து, மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தப்பி ஓடிய மற்றொரு போலி மருத்துவரை அஞ்செட்டி காவல் நிலைய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.