கொரோனா வைரஸ் நோய் தொற்று சீனாவையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அந்நாட்டில் மருத்துவம் படிக்கச்சென்று நாடு திரும்பிய போச்சம்பள்ளி மாணவிக்கு மருத்துவர்கள் குழு தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வடமலம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகள் சீனாவில் உள்ள யாம்சூ மாகாணத்தில் உள்ள யாம்சூ பல்கலையில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அண்மைக்காலமாக, சீனாவில் கொரோனா வைரஸ் கிருமியால் கோவிட்19 என்ற புதுவித நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோய் தாக்கி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாட்டவர்கள் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போச்சம்பள்ளி மாணவி, கடந்த ஜன. 30ம் தேதி சீனாவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார். அங்கிருந்து பிப். 1ம் தேதி சொந்த ஊரில் இருக்கும் தன் வீட்டிற்கு வந்தார். சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கொரோனா வைரஸ் குறித்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, போச்சம்பள்ளி மாணவிக்கு உள்ளூரைச் சேர்ந்த சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து 28 நாள்களுக்கு அவர் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர்கள் சிவகுமார், சரவணன் ஆகியோர் கூறுகையில், ''மக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருள்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்,'' என்றனர்.