அரியலூர், கடலூர், விழுப்புரம், மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இதுதொடர்பாக கோயம்பேட்டிலிருந்து ஊருக்கு வந்தவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்க்கொண்டனர். அப்போது அவர்கள் அளித்த தகவல், அதிகாரிகளை மட்டுமல்ல அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோயம்பேட்டிலிருந்து காய்கறிகள், சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரிகள் மூலம் ஏறினோம். லாரி டிரைவர்களுக்கு பயண கட்டணமாக விழுப்புரத்திற்கு 1000 ரூபாய், வேப்பூருக்கு 2000 ரூபாய், அரியலூருக்கு 2500 ரூபாய் கொடுத்து வந்தோம். உழைத்த பணத்தை கொடுத்து விட்டு தான் உயிர் பிழைத்தால் போதும் என்று புறப்பட்டு வந்தோம்.
வரும் வழியில் செக் போஸ்ட்டில் இருந்த போலீசார்கள் லாரி டிரைவர்களிடம் கணிசமான தொகையை வசூலித்துக் கொண்டனர். இதற்காக லாரி டிரைவர்கள் எங்களிடம் மேலும் கூடுதலாக பணம் வாங்கிக் கொண்டனர். இதனால் அனைத்து செக் போஸ்ட்டிலும் எந்த தடையும் இல்லாமல் எங்களால் வர முடிந்தது என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை உள்ள செக் போஸ்ட்டிலும் பணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் செக் போஸ்ட்டில் பணியிலிருந்த போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் அரசு அதிகாரிகளின் கணக்கின்படி 1400 என தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரையில் 800 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மீதி உள்ளவர்கள் பற்றி வருவாய்த்துறை, காவல் துறையினர் மற்றும் கிராம கண்காணிப்பு குழுவினர் கணக்கெடுத்து வருவதாகவும், மேலும் 400க்கும் மேற்பட்டவர்கள் முகாம்களிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதேபோன்று அரியலூருக்கு கோயம்பேட்டில் இருந்து வருபவர்ளை அவர்கள் வாகனங்களில் வந்து இறங்கும்போதே அவர்களை வேறு வாகனத்தில் ஏற்றிச் சென்று அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் அழைத்து சென்று தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளும் நடந்து வருகின்றன.
கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தந்தவர்கள் பற்றிய முழு விவரமும் இன்னும் தெரியவரவில்லை அதிகாரிகள் சொல்லும் கணக்கில் குழப்பம் உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.