தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிய தொழிலாளர்களைக் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யும் பணியை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில் கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூருக்குச் சென்ற தொழிலாளர்களில் இன்று (04/05/2020) மட்டும் 107 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சென்று வந்த தொழிலாளர்கள் 129 பேர் உட்பட மொத்தம் 160 பேருக்கு கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், "கடலூரில் இதுவரை 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட 699 பேரும் கோயம்பேடு சந்தை உடன் தொடர்புடையவர்கள். இன்று வெளியான 217 பரிசோதனை முடிவுகளில் 107 தொழிலாளர்களுக்கு தொற்று தெரிய வந்துள்ளது. கடலூரில் கிராமங்கள்தோறும் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
கோயம்பேடு மார்க்கெட் மூலம் தமிழகத்தில் சுமார் 300- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு மூலம் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தொற்று பரவியது. கடலூரில் அதிகபட்சமாக இதுவரை 129 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை 63, விழுப்புரம் 76, அரியலூர் 42, காஞ்சிபுரத்தில் 7, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர் மாவட்டத்தில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.