திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைமை பண்பு இல்லை எனவும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் சிலை அமைக்க செலவு செய்த நிதியை கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருகாகலாமே என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதிருப்பதற்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.
மோடியை திமுக தலைவர் ஸ்டாலின் சேடிஸ்ட் என கூறியதை மக்கள் ரசிக்கவில்லை எனவும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தலைமை பண்பு இல்லை எனவும் அவர் விமர்சித்தார். தமிழகத்தில் பிரிவினை சக்திகளுக்கு திமுக அரவணைப்பு தருகிறது எனவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில், மதிமுக, விசிக மேடையில் இடம் தராதது திமுக பொருளாளர் துரை முருகன் கூறியது அக்கட்சிகள் போல கூட்டணியில் இல்லை என்பதை காட்டுகிறது என தெரிவித்தார்.
வீரப்பன் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் நக்சல் ஒருங்கிணைப்பு பணிகள் நடப்பதாக செய்தி வந்துள்ளதாகவும், தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தீய சக்திகளான தமிழ் தேசிய பிரிவினைவாதிகள், ஆர்பன் நக்சல்கள் தடுக்கின்றனர் எனவும் கூறிய அவர், நக்சல் நடமாட்டத்தை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியை பெற தமிழக அரசு தயங்க கூடாது எனவும் தெரிவித்தார். ஈவெரா வழி வந்தவர்கள் கோவில்களை அழித்தார்கள் எனவும், வெட்கம் கெட்ட உப்பு போட்டு திங்காத கும்பல் உள்ள துறையாக இந்து சமய அறநிலைய துறை உள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் கோவில் சிலைகள் மீட்கப்பட்டதாக கூறும் அமைச்சர் மாபா பாண்டியராஜன், சிலைகள் எப்படி திருடப்பட்டது என்பதை கூற வேண்டுமென அவர் தெரிவித்தார்.
பெரியார் குத்து பாடலில் நடிகர் சிம்பு விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு, தாய் நாடு, தேச பக்தி, மதம் பற்றி விமர்சித்தால் பதில் சொல்வேன் எனவும், இதுபோன்ற சில்லறைதனத்திற்கு பதில் சொல்ல முடியாது எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
மத்திய அரசு கஜா புயல் நிவாரண நிதி தொடர்பான கேள்விக்கு, செய்தியாளர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா, செய்தியாளரை மோடி எதிர்ப்பு படையின் வழக்கறிஞர் போல பேசுவதாக கூறினார். மேலும் கஜா புயல் தொடர்பாக மாநில அரசிடம் இருந்து இறுதி அறிக்கை மத்திய அரசிற்கு வரவில்லை எனவும், ஊடகங்கள் தவறான செய்தியை திரித்து வெளியிட கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஏற்கவில்லை எனவும், அக்கூட்டணியில் தலைக்கு தலை நாட்டாமை என்ற நிலை உள்ளது எனவும் கூறிய அவர், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிலையற்ற நபர் என தெரிவித்தார். மறைந்த திமுக தலைவர் கலைஞர் சிலை அமைக்க செலவு செய்த நிதியை, கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே? என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்