காஜா புயல் பாதிப்புக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்திற்கு குறைந்த அளவே பறவைகள் வந்து செல்வதாக வனத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்திருப்பது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும், வெகுவாக கவலையடைய செய்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் இருக்கிறது பறவைகள் சரணாலயம். அங்கு ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வந்து போவது வழக்கம்.
இதுகுறித்து கணக்கெடுப்பு பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், " மழைக்காலம் துவங்கும் அக்டோபர் மாதம் முதல் கோடைகாலம் துவங்கும் மார்ச் மாதம் வரையிலும் கோடியக்கரையில் தங்கி சீசனை முடித்துக்கொண்டு தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்வது வழக்கம். சைபீரியா, ஈரான் ,ஈராக் ,நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் பறவைகள் வருகைதந்து சுற்றுளாபயணிகளை மகிழ்விற்கும். 4 அடி உயரமுள்ள அழகிய பூநாரையே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிசிறப்பு சேர்க்கும்.
கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை பர்மாவில் இருந்து சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம் என 247 வகையான பறவைகள் இங்கு ஆண்டு தோறும் வந்து செல்லும்.
247 வகையான பறவைகளில் 50 வகை நிலப்பபறவைகளும் 200க்கு மேற்பட்ட நீர் பறவைகளும் வந்து போவது வழக்கம். இதில் ஆலா மற்றும் கிரீன்சன்ங் உள்ளிட்ட ஆறு வகையான பறவைகள் மட்டுமே இங்கு முட்டையிட்டு குஞ்சுபொரித்து, குஞ்சிகளோடு செல்லும் மற்ற அனைத்து பறவை வகைகளும் சீசன் காலத்தில் தங்கிவிட்டு மட்டுமே செல்லும். முட்டையிட்டு குஞ்சு பொரித்தவுடன் முதலாவது குஞ்சுப்பறவைகளை தன்னுடைய சொந்த நாட்டிற்கு இயற்கையின் தூண்டுதலால் அனுப்பிவிடும், அதன்பிறகே தாய் பறவைகள் செல்லும். இப்படி உண்ணதமான சரணாலயம் சேதமாகியதால் கலையிழந்துக்கிடக்கிறது. அதனால் பறவைகளின் வரவும் குறைந்துவிட்டது."என்கிறார் அவர்.
கோடியக்கரையில் பறவைகள் சரணாலத்தைப்போல் விலங்களுக்கான சரணாலயமும் சிதைத்துள்ளது. அங்குள்ள மீனவர் ஒருவர் கூறுகையில், " எங்க ஊருக்கான சிறப்பு பறவைகள் சரணாலயமும் விலங்குகள் சரணாலயம் தான். அதன் பிறகுதான் மீன்பிடித்தொழில். எங்களுக்கான வாழ்வாதாரம் அழிந்தது ஒருபுறம் இருந்தாலும் புயலால் ஆயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிந்துவிட்டன. அதனால் பறவைகளுக்கான சுதந்திரம் மற்றும் சுகபோக நிலை மாறிவிட்டது. அதனால் வந்த பறவைகள் அனைத்துமே இடம்பெயர்ந்து விட்டன. தற்போது உள்ளூர் பறவைகளையும், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் இங்கேயே தங்கியிருக்கும் பறவைகளை மட்டும் கணக்கெடுக்கிறாங்க.
"கஜாபுயல் பொதுமக்களை மட்டும் நாசப்படுத்தவில்லை விலங்குகளையும் பறவைகளையும் சேர்த்தே அழித்து விட்டு சென்றிருக்கிறது. கோடியக்காடு பழமையான நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் பிடிக்கும் ".என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.