திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமாக பல இடங்களிலும் கோயில்கள், சொத்துகள் ஏராளமாக உள்ளது. அதில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில். இந்த கோயிலுக்கு பல வேலி நிலங்கள் சொந்தமாக உள்ளது. அந்த நிலங்களில் இருந்து வாரமாக வரும் நெல் மற்றும் தானியங்களை வைக்க தானியக் கிடங்கும் உள்ளது. இப்படியான சிறப்பு மிக்க கோயிலுக்கும் ஒருவர் அடிக்கடி வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் சுவாமி சன்னத்தியல் நின்ற படம் எடுத்துள்ளது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து ஆவுடையார்கோயிலை சொந்த ஊராக கொண்ட சென்னையில் வசிக்கும் திருநீலகண்டன் என்பவர் காவல்துறை மத்திய மண்டல ஐ.ஜி, திருச்சி சரக டி.ஐ.ஜி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில்.. ஆவுடையார்கோயில் சுற்றியுள்ள பல கிராமங்களில் சொத்துகள் உள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள கடைகளும் கோயிலுக்கு சொந்தமானது. ஆனால் அத்தனை சொத்துக்களையும் ஆதினத்தில் இருந்து முறையாக பராமரிக்கவில்லை. சிலர் தாங்கள் தான் ஆதினத்தின் அதிகாரி என்று சொல்லிக் கொண்டு ரசீது புத்தகம் வைத்துக் கொண்டு சொத்துக்களை தனியார் நபர்களுக்கு தாரை வார்த்து வருகின்றனர். தற்போது கூட வெள்ளாற்று பாலம் அருகே எசமங்கலம் கிராமத்தில் 128 – 2, 129 – 2 ஆகிய பல எண்களில் உள்ள சொத்துக்களை பலரும் வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த தகவல் ஆதினத்திற்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
தற்போது முத்துக்கிருஷ்ணன் என்பவர் தன்னை திருவாடுதுறை ஆதீனத்தின் தென் மண்டல மேலாளர் என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலுக்குள் சென்று பெரிய வீச்சரிவாள், கத்தி போன்ற கொலை ஆயுதங்களுடன் கோயில் சன்னதியில் நின்று படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரவ்விட்டதால் கோயில் ஊழியர்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்துக்கிருஷ்ணனின் இந்த செயல் ஆதீனத்தின் மாண்மை கெடுக்கும் விதமாக உள்ளது. இந்த தகவல்கள் ஆதீனத்திற்கு தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த தகவல் பற்றி புகார் கொடுக்க முயன்றதால் பலர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் முத்துக்கிருஷ்ணன் பற்றி புகார் கொடுக்க கூடாது என்றும் சிலர் போனில் மிரட்டி வருகின்றனர். அதில் ஒருவர் போலிசார் என்றும் சொல்கிறார்.ஆகவே ஆதீனத்தின் மாண்மை கெடுக்கும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.