
சட்டப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (02.04.2025) முன்மொழிந்தார். அதில், “கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில், “தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக என அனைத்து கட்சியும் ஆதரவு அளித்தனர். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கச்சத்தீவை மீட்டெடுப்பதாக இன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.
இதை மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக இணைந்து நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும். அனைவரும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், தடையையும் ஏற்படுத்தாமல், உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக மீனவர்கள் தங்கள் வாழ்க்கை, உயிர், உடமைகள் எல்லாவற்றையும் இழந்து மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு ஒன்றையே கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை முறைப்படுத்தி, ஏற்கனவே கச்சத்தீவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் கச்சத்தீவை நமது இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திரமோடி இலங்கை செல்லும் பொழுது கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும். மீனவர்களுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.