தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று (27/08/2021) மீண்டும் நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் மற்றும் தனபாலிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், நீதிபதியிடம் வழங்கினார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 10 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில், சயான் மட்டுமே நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கில் இதுவரை 109 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படும் என சொல்லப்பட்டிருந்த நிலையில், சம்மன் எதுவுமே அனுப்பப்படவில்லை. எந்தவிதமான சாட்சியும் வரவில்லை.
இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு காவல்துறை சாட்சியாக உள்ளவரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவருமான ரவி என்பவர் வழக்கு விசாரணைக்கு தடைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை எதுவும் விதிக்காத சமயத்தில் 2ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை செப். 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
வழக்கு விசாரணை முடிந்த பிறகு வெளியே வந்த அரசு தரப்பு வழக்கறிஞர்களை கேட்டபொழுது, “சாட்சியங்கள் அனைத்துமே விசாரணைக்காக அழைக்கப்படும். அதே சமயத்தில் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் அவர்களுடைய சாட்சியங்களை கொண்டு வந்ததும் அவர்களிடத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர். மேலும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தரப்பிலும் நீதிபதியிடம், ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்னும் பல முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என மனு கொடுத்துள்ளனர்.
அதேபோல், எதிர்த்தரப்பு வழக்கறிஞர் விஜயன் கூறும்போது, “சாட்சியங்கள் அனைவருமே விசாரணைக்காக அழைக்கப்படுவர். அதே சமயத்தில் புதிதாக ஒரு பெட்டிஷன் போட்டு இருக்கிறோம். அதில் கொடநாடு எஸ்டேட்டில் மீண்டும் ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறோம். அதேபோன்று இதில் முக்கிய குற்றவாளிகளாக மேலும் 7 பேரை சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். வருகின்ற செப்டம்பர் 2-ம் தேதி விசாரணை முடிவில் தெரியவரும்” என்று தெரிவித்தார்.