
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் குறித்து ஜூலை 16- ஆம் தேதிக்குள் பதிலளிக்க, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-இல் காவலாளியைக் கொலை செய்து, கொள்ளையடித்ததாக, சயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த கோத்தகிரி போலீசார், அவர்களைக் கைது செய்தனர்.
இவர்களை ஜாமீனில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் எட்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், தங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுக்கள் இன்று (07/07/2020), நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்ப ராஜ், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். தொடர்ந்து, காவல்துறையை வரும் 16- ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினமே சயான், மனோஜ் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.