கொடைக்கானலில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது.
![kodaikanal](http://image.nakkheeran.in/cdn/farfuture/WQ0AKM2kKKA_arK01ENRKcoL3UVUyyeV_ZlBGEv9hvs/1551255074/sites/default/files/inline-images/kodaikanal.jpg)
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக விளங்கி வருவதால் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வருவார்கள். இப்படி வரக்கூடிய பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் உள்ள லாட்ஜ்களிலும், காட்டேஜ்களிலும், வீடுகளிலும் தங்கிவிட்டு செல்வார்கள். இதனால் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் ஆங்காங்கே ஈசல் புற்றுகள் போல் முளைத்திருந்தன.
இந்த நிலையில்தான் கோட்டையைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர். அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 45 கட்டடங்களுக்கு சீல் வைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கமிஷ்னர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 45 கட்டிடங்களுக்கு சீல் வைத்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மேலும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 1415 கட்டடங்களுக்கு சீல் வைத்து வரும் மார்ச் 11-ம் தேதிக்குள் அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி கமிஷ்னர் முருகேசன் விதிமுறைகளை மீறி கட்டிய 1415 கட்டடங்களை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.
இந்த நிலையில்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்பட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டசபையில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், இயக்குனர் ராஜேஷ் லக்கானி உட்பட பல அதிகாரிகள் கொடைக்கானலுக்குவந்து மாஸ்டர் ப்ளானை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கி இருந்தனர். கோர்ட் உத்தரவுப்படி, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சிறு வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களை மறு உத்தரவு வரும்வரை சீல் வைக்கக்கூடாது, மீதி உள்ள விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க சொல்லியும் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில்தான் நகராட்சி கமிஷ்னர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்ற தகவல், கட்டிட உரிமையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் தெரியவர அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதேபோல் ஆங்காங்கேயுள்ள வாட்ச் உரிமையாளர்களும், வியாபாரிகளும் பெரும் பெருந்திரளாக நின்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க விட மாட்டோம் என போர்க்கொடி தூக்கினர். காவல்துறையினர் விதிமுறைகளைமீறி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களையும், வணிகர்களையும் அழைத்து பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளனர்.