கொடைக்கானலில் சுற்றுலா வந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொடைக்கானல் ஹோட்டல் அசோசியேஷன் தலைவராக இருந்து வருபவர் அப்துல் கனி ராஜா. இவர் திண்டுக்கல் கிழக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார். கொடைக்கானலில் முக்கிய பகுதியான நாயுடுபுரம் பகுதியில் ரோஷன், ஷாலியா என்ற இரண்டு தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி சென்னையில் இருந்து வழக்கறிஞர் ஒருவர் மகள், மனைவி என குடும்பத்துடன் கொடைக்கானலை சுற்றிப் பார்க்க வந்துள்ளார். அப்பொழுது வழக்கறிஞர் மனைவி தனக்கு உடல் சோர்வாக இருப்பதால் தான் விடுதி அறையிலேயே இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் வழக்கறிஞரும் அவரது மகளும் கொடைக்கானலை சுற்றிப் பார்க்க சென்றனர்.
இந்த நிலையில் வழக்கறிஞரின் மனைவி தனது அறையில் வைஃபை இணைப்பு எடுக்கவில்லை என போன் மூலம் விடுதி உரிமையாளர் அப்துல் கனி ராஜாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரது அறைக்கு சென்ற அப்துல் கனி ராஜா அப்பெண் தனிமையில் இருப்பதை அறிந்து கொண்டு அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டதால் அப்துல் கனி ராஜா அந்த அறையை விட்டு வெளியே ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப் பெண் நடந்ததை தனது கணவருக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உடனடியாக அறைக்கு வந்த வழக்கறிஞரும் அவரது மகளும் அறையை காலி செய்து கொண்டு கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு சென்று சுற்றுலா வந்த இடத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பற்றி புகார் அளித்தனர். உடனடியாக தங்கும் விடுதி உரிமையாளர் அப்துல் கனி ராஜாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது.
அதைத் தொடர்ந்து அப்துல் கனி ராஜா மீது 354 (A), 376, 511 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆனால், அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காவல் நிலையம் முன்பு கூட்டம் கூடியது. அப்துல் கனி ராஜாவை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல போலீசார் திட்டமிட்ட நிலையில், அவர் மயக்கம் அடைந்ததாகக் கூறப்பட்டது. அவரை தூக்கிச் சென்ற போலீசார் கொடைக்கானல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
கொடைக்கானலில் சுற்றுலா வந்த குடும்பத்தினருக்கு நேர்ந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.