தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அரசாணையில் தெரிவிப்பட்டிருந்தது.
தமிழக அரசின் சொத்துவரி உயர்வு தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து இன்று சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இரண்டாண்டு கால சோதனையை தாக்கு பிடிக்காத நிலையில் இன்றைய தினம் திமுக அரசு மக்கள் தாக்குபிடிக்க முடியாத அளவுக்கு சொத்துவரியை 150 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இன்று தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரமே பாதித்து நிலைகுலைந்திருக்கும் நிலையில் சொத்துவரியை உயர்த்தியது கண்டனத்திற்குரியது'' என தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்பொழுது, ''இந்த வரி உயர்வை 2018 ஆம் ஆண்டே அதிமுக 200 சதவிகிதம் உயர்த்தி இருந்தார்கள். தேர்தல் வரும் காரணத்தால் அதனை உடனடியாக நிறுத்திவிட்டு தேர்தலுக்கு பிறகு உயர்த்துவதாக நிறுத்தியவர்கள்தான் அவர்கள். அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் ஏழை பணக்காரர் என்று இல்லாமல் எல்லோருக்கும் ஒரேமுறையிலே வரி உயர்வு தரப்பட்டது. நமது முதல்வர் ஏழைகளுக்கு குறைவாகவும், 1,800 சதுரடிக்கு மேல் உள்ளவர்களுக்கு வரியை கூடுதலாகவும் உயர்த்தி உள்ளார். இதுதான் இன்றைய நிலைமை. மத்திய அரசு சொல்லிவிட்டார்கள் சொத்துவரியை ஏற்றவில்லை என்று சொன்னால் இந்தாண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் நிதி உங்களுக்கு வராது என்று கட்டளையிட்டார்கள்'' என்றார்.