Skip to main content

குடும்பத்துடன் காரில் சுற்றுலா சென்ற அப்பாவி இன்ஜினியர்: டிரைவராக வந்த மனைவியின் காதலன்

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
Wife, driver escape




கர்நாடகா மாநிலம், பாலக்காபாடி, காஞ்சிபட்டா ஜெஎம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சமீர். 32 வயதாகும் சமீர் அரவு நாட்டில் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். சமீருக்கும் மங்களூருவைச் சேர்ந்த மைனா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. 
 

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லலாம் என்று மனைவி கூறியதால், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி மனைவி, குழந்தையுடன் வாடகை காரில் புறப்பட்டார். கார் டிரைவர் முகமதுயாசி பெங்களூரூவில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கி விட்டு அடுத்த நாள் காரில் சேலம் வந்துள்ளனர். அங்கிருந்து பின்னர் கொடைக்காணல் சென்றுள்ளனர்.
 

இதையடுத்து 17ஆம் தேதி மைனா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது பெற்றோர், மருமகன் சமீர் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு, சமீர் வேறொரு பெண்ணோடு சேலத்தில் இருந்து எங்கேயோ போய்விட்டார் என்று கூறியுள்ளார். பின்னர் மைனா பெற்றோர் வீட்டில் இருந்துபுறப்பட்டுவிட்டார். 
 

அப்போது மைனா பெற்றோர், தங்களது வீட்டில் இருந்த 60 பவுன் நகையை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மைனா பெற்றோர், தனது மகள் மைனா மற்றும் மருமகன் சமீர் ஆகியோரை தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகளையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.
 

இதேபோல் கார் டிரைவர் முகமது யாசினை காணவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். சந்தேகம் அடைந்த போலீசார், மைனா மற்றும் முகமது யாசிம் செல்போன் உரையாடலை வைத்து சோதனை செய்தனர். 
 

இதனிடையே கடந்த 18ஆம் தேதி கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள காட்ரோடு டம்டம் பாறை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். தேவதானப்பட்டி போலீசார், பிரேதப்பரிசோதனைககுப்பின் சுடுகாட்டில் புதைத்தனர். 
 

மைனா மற்றும் முகமது யாசிம் செல்போன் உரையாடலை சோதனை செய்த மங்களூரூ போலீசார் சமீர் உறவினர்கள் சிலருடன் தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். டம்டம் பாறை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலத்தை பார்க்க வேண்டும் என்றனர். அப்போது அந்த சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டபோது, கொலை செய்யப்பட்டது சமீர் என்று தெரிய வந்தது. 
 

போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, மைனா - முகமது யாசி இடையே கள்ளக்காதல் இருப்பது தெரிய வந்தது. கணவனை கொலை செய்வதற்காகவே கொடைக்காணல் செல்லலாம் என்று மனைவி கூறியிருக்கிறார். இதற்காக தனக்கு தெரிந்த கார் டிரைவர் உள்ளார் என்று கூறி முகமது யாசினை வரவழைத்துள்ளார். 
 

சேலத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் போது, டம்டம் பாறை அருகே பட்டறைப்பாறை என்ற இடத்தில் முகமது சமீர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை மனைவி மைனா, கள்ளக்காதலன் டாக்சி டிரைவரான முகமது யாசி ஆகியோர் கழுத்தை அறுத்துக் கொன்று, அவரது உடலை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.


செப். 17ம் தேதி  குழந்தையுடன் வீட்டுக்குச் சென்ற மைனா வீட்டில் இருந்து 60 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது. செல்போன் உரையாடலை வைத்து  சோதனை செய்த போது அவர்கள் தமிழகத்தில் உள்ள தர்மபுரியில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர். 

 


 

சார்ந்த செய்திகள்