Skip to main content

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த 3 மாத அவகாசம்!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Tamil Film Producers Association has 3 months to hold elections!


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய காலக்கெடு இன்றோடு முடிவடைய இருந்த நிலையில், கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு, தேர்தலை நடத்தி முடிக்க, மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி,  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளர் அந்தஸ்திலான தனி அதிகாரியை தமிழக வணிகவரித்துறை நியமித்தது.

 

தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி விஷால் வழக்கு தொடர்ந்தும், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. 

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்  தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து, ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.

 

கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு, காலக்கெடுவை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீதிமன்றம் ஏற்கனவே நீட்டித்திருந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்தி முடிக்கப்படாததால், மீண்டும் தேர்தலை நடத்தி முடிக்க கால அவகாசம் வழங்கக் கோரி  ராதாகிருஷ்ணன் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று நீதிபதி பி.டி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்றும், சிறப்பு அதிகாரியான ஒய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை ஜனவரி 30 -ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்