வேலூர் மாவட்டம், சோளிங்கர் பேரூராட்சியில் சில இடங்களில் அரசு அனுமதியில்லாமல் பார் நடத்துவதோடு, அங்கு கள்ள மார்க்கெட்டில் மதுபானம் விற்பனையும் நடைபெறுவதாக இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்க்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றது. அந்த புகார்களின் அடிப்படையில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒருக்கடையில் பாரில் குடிமகன்கள் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். அதோடு, அங்கு கள்ள மார்க்கெட்டில் மதுபானமும் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. இந்த ஆய்வின் போது அவைகளை காவல்துறை மூலம் பறிமுதல் செய்யவைத்தார் சார் ஆட்சியர். அதேபோல் மேற்கு போர்டின் தெருவிலும் அனுமதியற்று மதுபானம் விற்பனை செய்து வந்த ஒருவர் பிடிபட்டார்.
இவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் இருந்த பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சோளிங்கர் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் எரும்பி என்ற ஊரைச் சேர்ந்த சவுரி, விஜயகுமார் ஆகிய இரண்டு நபர்கள் மீதும் குற்றவியல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுக்கா ஆதிவராகபுரத்தை சேர்ந்த கோபி என்பவர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் அனுமதியில்லாத இந்த மதுபான கடைகளுக்கு மொத்தமாக மதுபானங்கள் சப்ளை செய்த பாண்டிய நல்லூர் கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடை மேற்பார்வையாளர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் வருவாய்த்துறையினர்.