கரூரில் பேருந்தில் வந்த இளம் பெண்ணை புல்லட்டில் கடத்திச் சென்று நகைகளை பறித்த சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா அருகே உள்ளது கோட்டூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில் பேருந்து மூலம் குளித்தலை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது புல்லட் பைக்கில் அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அப்பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். குளித்தலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சாந்திவனம் காவிரி ஆற்றுப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, காதில் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி என மொத்தம் ஆறு சவரன் நகைகளை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
இது குறித்து அப்பெண் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். நடத்தப்பட்ட விசாரணையில் புல்லட் பைக்கின் நம்பர் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வைத்து போலீசார் புலன் விசாரணை செய்தனர். அதனடிப்படையில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற 25 வயது இளைஞரையும், சரவணன் என்ற 26 வயது இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருடிய நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து நகைகளை மீட்ட போலீசார் இருவரையும் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தார்.