கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள வளையமாதேவி ஊரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் 4 வயது சிறுவன் கவின். நேற்று சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்கள் வீட்டருகே ஒரு புற்றிலிருந்து வெளியே வந்த பாம்பு சிறுவனைக் கடித்துள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பெற்றோரிடம், தன்னை பாம்பு கடித்து விட்டதாகக் கூறியுள்ளான் கவின்.
இதையடுத்து அவர்கள், மகனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு அவசரமாக புறப்பட்டனர். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் வாகனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரிடம் பைக்கை இரவல் வாங்கிக்கொண்டு அவர்கள் ஊரான வளையமாதேவியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரமுள்ள சேத்தியாதோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்த செவிலியர்கள் சிறுவனின் நாடித் துடிப்பைப் பார்த்துவிட்டு, நாடித்துடிப்பு குறைந்து வருகிறது என்று கூறியுள்ளனர். ஆனால், அங்கு பாம்பு கடிக்கான மருந்துகள் இல்லாததாலும் அங்கிருந்து சிதம்பரம், கடலூர் போன்ற ஊர்களுக்குச் செல்வதற்கு போதிய வாகன வசதி இல்லாததாலும் பெரிதும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து ஒரு மணி நேரம் கழித்தே ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அந்த ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு சிறுவனின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு பகுதியில் வாழும் மக்கள், அரசு சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்களோ மருந்து மாத்திரைகளோ இல்லாத காரணத்தால்தான் சிறுவன் உயிரிழந்துள்ளதாகக் கூறினர். மேலும், ஊரடங்கு காலத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் அவசர உதவிக்கு வந்து சேரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுகாதார நிலையங்களில் விஷக்கடிக்கு முறிவு ஏற்படுத்தும் மருந்துகள் அவசியம் இருப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல், போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை அரசும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு விரைந்து தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள கிராம மக்கள்.