தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலா பகுதியியல் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
முண்டக்கை பகுதியில் அமைக்கப்பட்ட இரும்பு பாலம் வழியாக பல்வேறு உபகரணங்கள் கொண்டு சென்று மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தான் நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேறு மற்றும் சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் தெர்மல் ஸ்கேனர் கருவி காட்டிக் கொடுக்கும். காணாமல் போனவர்களையும், மண்ணில் புதையுண்டவர்களையும் கண்டறிய ஏற்கனவே மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் தமிழகத்தில் மலை கிராமங்கள் அமைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக திண்டுக்கல், நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி என மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களைக் கண்காணிக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
கனமழை உள்ளிட்ட மோசமான வானிலை நேரங்களில் கூடுதலாக கண்காணிப்புகள் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது. திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மழை பெய்யும் நேரத்தில் மலை கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.