Skip to main content

வைப்பாற்றில் கறிச்சோறு உண்ணும் மணல்மேட்டுத் திருவிழா! -ஆனந்தப்பெருக்கில் சாத்தூர்!

Published on 16/01/2019 | Edited on 16/01/2019
m

 

கேரளாவில் உருவாகி தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வழியாக தூத்துக்குடிக்கு வடக்கில் மன்னார் வளைகுடாவில் கலக்கிறது வைப்பாறு.  சாத்தூரில் இந்த வைப்பாற்றுப் பகுதியில்  ‘மணல்மேட்டுச் சங்கமம்’ எனப்படும் மணல்மேட்டுத் திருவிழாவை, தைப்பொங்கலுக்கு மறுநாளான கரிநாளான இன்று,  மதபேதமின்றி மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

 

m


குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு ஆதாரமாக வைப்பாறு திகழ்ந்தாலும், பாரம்பரியமான ஒரு கலாச்சாரம், இங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தினர் கறிச்சோறு கொண்டுவந்து, இங்கே மணல்மேட்டில் உட்கார்ந்து ஒன்றுகூடி சாப்பிடுகின்றனர். கரும்பு கடித்து, பனங்கிழங்கை உரித்துத் தின்று, இன்றைய தினம் ஆற்றுப்பகுதியில் முளைத்த திடீர் கடைகளில் குழந்தைகளுக்கு பண்டங்களை வாங்கித் தந்து, அவர்களுடன் விளையாடுகின்றனர்.   பகலில் ஆரம்பித்து இரவு வரை நீடிக்கிறது இத்திருவிழா. 


தொன்றுதொட்டு தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவரும் அடையாளங்களில் ஒன்றுதான் இந்த மணல்மேட்டுத் திருவிழா!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்திரை திருவிழா: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திரண்ட திருநங்கைகள்

Published on 03/05/2018 | Edited on 03/05/2018

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 17-ந் தேதி இந்த விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலிகட்டி கொள்ளும் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திருநங்கைகள், கூத்தாண்டவரை தங்கள் கணவராக ஏற்றுக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். தொடர்ந்து அரவாணுக்கு மனைவிகள் ஆகிவிட்டோம் என்கிற மகிழ்ச்சியில் இரவு முழுவதும் கூட்டம், கூட்டமாக கும்மியடித்து ஆடிப்பாடி அவர்கள் மகிழ்ந்தனர்.
 

விழாவில் 16-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் பெரியசெவலை சாலையில் உள்ள அழிகளம் நோக்கி தேர் புறப்பட்டது. அதுவரை புதுமண பெண்கள் போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்த திருநங்கைகள் சோகமயமாகினர். பலர் ஒப்பாரி வைத்து கதறி அழுத படியே தேரை பின்தொடர்ந்து சென்றார்கள்.
 

மதியம் 1 மணியளவில் அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலை தேர் சென்றடைந்தது. அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்குமப்பொட்டை அழித்தனர். தொடர்ந்து பூசாரிகள், திருநங்கைகள் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து, கழுத்தில் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்தார்கள்.
 

அதன் பிறகு திருநங்கைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று குளித்து தலை மூழ்கி வெள்ளை சேலை அணிந்து விதவைக் கோலம் பூண்டு சோகமாக அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
 

18-ம் நாள் நிகழ்ச்சியாக நாளை தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளோடு இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவடைகிறது.