ஈரோடு கொல்லம்பாளையம், நாடார் மேடு, நேரு வீதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் 37வயது. பெயிண்டர் தொழில் செய்து வந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. குடிப்பழக்கம் உள்ள மஞ்சுநாதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நாடார் மேடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மது குடிக்க சென்றனர். அப்போது குடிகார நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது திடீரென அவரது நண்பர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுநாதன் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனலிக்காமல் மஞ்சுநாதன் இறந்துவிட்டார்.
இதற்கிடையே டாஸ்மாக் பாரில் மஞ்சுநாதனை அவரது நண்பர் கத்தியால் குத்தும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஈரோடு விக்னேஷ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார், சதாசிவம் ,தாமோதரன்,முருகன் ஆகிய 4 பேர் கைது செய்தனர்.
விசாரணையில் யார் பெரிய குடிகாரன் என்ற தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
யார் பெரிய குடிகாரன் என்பதில் ஏற்பட்ட பிரச்சனை கொலையில் முடிந்திருக்கிறதே.. கொடுமை யப்பா கோவிந்தா என்று அதே டாஸ்மாக் கடையில் "குடி" மகன்கள் பேசிக் கொண்டனர்.