இந்தியாவிலேயே முதன் முறையாக ரேடார் தொழில்நுட்பம் மூலம் தமிழனின் நாகரீகத்தை கூறும் அற்புத இடமானா ஆதிச்ச நல்லூரில் அகழாய்வு செய்வதற்கான பணிகளை தமிழக தொல்லியல் துறை தொடங்கியுள்ளது.
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று. உலகின் முதல் நாகரீகமான தமிழனின் நாகரீகத்தை கூறும் அற்புத இடம். ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது தமிழ் மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர் இது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர்.
இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இங்கு தான் ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான இரு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அது போக 185 தாழிகளும், மக்கிய நெல்மணிகள், ஆயுதங்கள், பொன் நகைகள் உட்பட பல பொருட்கள் கிடைத்தன.
1876, 1896, 1902 மற்றும் 2004ம் ஆண்டுகளில் இங்கு நடைப்பெற்ற ஆய்வுகளின் தர அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் அதனின் துல்லிய வருடத்தினை அறிய அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் ரேடியோ கார்பன் டேட்டிங் பகுப்பின் கீழ் ஆய்வினை நடத்தினர் இந்திய தொல்லியல் துறையினர். அதனடிப்படையில் ஆதிச்சநல்லூரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கி.மு.900 ஆண்டைச் சார்ந்த மக்கள் பயன்படுத்திய என்பது உறுதியானது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் வருடங்கள் கி.மு.600 என கணக்கிடப்பட்டிருக்க, அதற்கு முந்தையது கி.மு.900 வருடத்திய நாகரிகம் எங்களுடையது என்கின்றது ஆதிச்சநல்லூர்.
இவ்வேளையில், தாமிரபரணி நதிக் கரையை ஒட்டியுள்ள ஊர்களில் கள ஆய்வு செய்வதற்கும், கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள தர்மபுரி, சேலம் போன்ற பகுதிகளில் கள ஆய்வு செய்வதற்கும் தமிழகத் தொல்லியல் துறை திட்டமிட்ட நிலையில், இதற்காக தமிழக அரசும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதனடிப்படையில் மீண்டும் ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக ரேடார் தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. "இந்த ரேடார் தொழில் நுட்பம் மூலம் பூமிக்கடியில் 8 மீட்டர் ஆழம் வரை ஊடுருவி அங்குள்ள தனிமங்கள், கனிமங்களை புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யும்" என்கின்றனர் தொல்லியல் துறையினர்.