புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விலையுயர்ந்த பைக்களை கஞ்சா கடத்தல் கும்பல்கள் திருடி கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திவிட்டு சில ஆயிரங்களுக்கு விற்றுவிட்டு வேறு பைக்களை திருடிக் கொள்கின்றனர். அதேபோல் சிசி குறைவான பைக்களை திருடும் கும்பல் விலை குறைவாக விற்றுச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பைக் திருட்டு போக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு நபர் பைக்கை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. அடுத்த சில நாட்களில் அதே நபர் அறந்தாங்கியில் ஒரு பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த பதிவுகளை வைத்துக் கொண்டு அறந்தாங்கி, நாகுடி போலீசார் பைக் திருடனை தேடி அலைந்தனர்.
கிரைம் டீமில் உள்ள போலீசார் இது கொத்தமங்கலம் கண்ணன்போல உள்ளது. போன மாதம் தான் சிவகங்கை மாவட்ட சிறையில் இருந்து வெளியில் வந்திருக்கிறான்.வெளியே வந்ததும் மீண்டும் தொழிலை தொடங்கி விட்டான் போல என்று கூறியதுடன் கண்ணனின் நடமாட்டத்தையும் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று கீரமங்கலம் காவல் சரகத்தில் ஒரு பைக் திருட்டுப் போன நிலையில் கொத்தமங்கலம் கண்ணனை தேடி வந்தனர். பைக் திருடன் கொத்தமங்கலம் கண்ணன் பனங்குளம் பகுதியில் சுற்றுவதை அறிந்து கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, உதவி ஆய்வாளர் விக்னேஷ், தலைமைக் காவலர் கணபதி உள்ளிட்ட போலீசார் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணனை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவனிடம் இருந்தது துட்டு பைக் என்பதும் அதனை விற்கச் செல்வதும் தெரிய வந்தது.
பைக்குடன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, சிறையில் இருந்து வெளியே வந்த சில வாரங்களில் நாகுடி, அறந்தாங்கி, கீரமங்கலம், பேராவூரணி ஆகிய ஊர்களில் 5 மோட்டார் சைக்கிள்களை திருடி ஒரு பைக்கை குளமங்கலத்தில் விற்றதாகவும், ஒரு பைக் என்னிடம் உள்ளது மீதி 3 பைக்குகள் பனங்குளத்தில் ஒரு குளக்கரையில் மறைத்து வைத்திருப்பதாகவும் சொல்ல போலீசார் 5 பைக்குகளையும் மீட்டு வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
இந்த கண்ணன் கொத்தமங்கலம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன். பல வருடங்களாக பல நூறு பைக்குகள் திருடி விற்றவர். பலமுறை கைது செய்து பல மாதங்கள் சிறையில் இருந்தாலும் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் திருட்டை தொடங்கிவிடுவதும் வழக்கமாக கொண்டுள்ளார். சிறைக்கு சென்றால் திருந்திவிடுவார் என்றால் திருந்தவில்லை என்கின்றனர் போலீசார்.