Skip to main content

“கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி!” -கே.பி.முனுசாமியின் சர்ச்சை பேச்சு

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கின்ற 18 சட்டமன்ற தொகுதிகளில் ஓசூரும் ஒன்று. இங்கு இடைத்தேர்தல் ஏன் வந்தது?  20 ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டத்தில், பேருந்துகள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில், அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம். அதனால், அவருடைய மந்திரி பதவியும், எம்.எல்.ஏ. பதவியும் பறிக்கப்பட்டு, ஓசூர் தொகுதி காலி இடம் என்று அறிவிக்கப்பட்டதால்,  இடைத்தேர்தல் வந்திருக்கிறது. 

 

BB

 

இன்று (21-3-2019) ஓசூரில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியின் மனைவி ஜோதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மைக் பிடித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி -

 

“சமூக விரோத சக்திகளை அடக்க வேண்டுமென்று போராட்டம் நடத்திய பாலகிருஷ்ணரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1998-ஆம் ஆண்டு நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இது நடந்தது. அந்த வழக்கில் 73-வது குற்றவாளியாக (49-வது குற்றவாளி என்பதே சரியானது) பாலகிருஷ்ணரெட்டி சேர்க்கப்பட்டார். கண்ணை மூடிக்கொண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிவிட்டார் நீதிபதி. கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு வழங்கினாலும் ஓசூர் தொகுதி மக்கள், வேட்பாளர் ஜோதியை வெற்றிபெறச் செய்வார்கள்.” என்றார்.  அவரது பேச்சைக் கேட்டு,  அதிமுகவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 

 

cnramki (781)

 

1998-ல் உண்மையிலேயே நடந்தது என்னவென்றால், ஓசூர் ஜூமங்கலம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் கும்பலுக்கு போலீசார் துணைபோவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, கோவிந்தரெட்டி என்பவரோடு கிராம மக்கள் திரண்டுவந்து,   பாகலூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர். அப்போது, காவல்துறை வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தினர். அரசுப் பேருந்துகளும் கல்வீசித் தாக்கப்பட்டன. கலவரத்தைத் தடுத்த போலீசார் மீதும் கல் வீசினார்கள். அதனால், 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த வழக்கில், அப்போது பா.ஜ.க.வில் இருந்த பாலகிருஷ்ணரெட்டியை   49-வது குற்றவாளியாகச் சேர்த்தனர்.  2001-ல் அவரை அதிமுகவுக்கு அழைத்துவந்து,   ஓசூர் நகர்மன்ற தலைவராக்கினார் கே.பி.முனுசாமி. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா  பெங்களூரு சிறைக்கு செல்லும்போது, வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்து கடந்த தேர்தலில்  ஜெயலலிதா ஆசியோடு சீட் கிடைத்து மந்திரியும் ஆனார். 

 

 

மக்கள் பிரதிநிதிகளின் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்தான்,  பாலகிருஷ்ணரெட்டிக்கு தண்டனை வழங்கியது. இதையெல்லாம் அறியாததுபோல், கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பளித்தார் என்று நீதிபதியை விமர்சித்திருக்கிறார் கே.பி.முனுசாமி. 

 

 

சட்ட விதிகளுக்கு உட்ப்பட்டு வழக்கின் போக்கையும், வாதங்களையும், ஆவணங்களையும், சாட்சிகளையும் ஆதாரமாகக்கொண்டு, தீர்ப்பு வழங்கிய நீதிபதியை விமர்சித்திருக்கிறார் கே.பி.முனுசாமி.  இது நீதித்துறை மீதுள்ள மாண்பினைக் குறைக்கும் செயலல்லவா? தீர்ப்பை விமர்சனம் செய்யலாம்; தீர்ப்பு வழங்கிய நீதிபதியை விமர்சனம் செய்வது குற்றமாகும். இதை நீதிமன்ற அவமதிப்பென்றும் கருத முடியும். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், தமிழகத்தில் அமைச்சராகவும் இருந்த கே.பி.முனுசாமி இப்படி பேசலாமா?  

 

 

 

சார்ந்த செய்திகள்