காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகேயுள்ள காவனூர் பகுதியைச் சேர்ந்த வீரா (25) என்பவர் சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சி கம்பெனியில் வீடுகளுக்கு சமையல் சிலிண்டர் விநியோகம் செய்பவராக இருந்துவந்துள்ளார். கேஸ் சிலிண்டர் விநியோகம் மூலம் வசூல் செய்த பணத்தை, தனது நண்பர் மூலமாக அவர் பணி செய்துவரும் கியாஸ் ஏஜென்சி மேனேஜர் மறைமலை நகர் சுகுமாரிடம் கொடுத்துள்ளார்.
அதை வாங்க மறுத்துள்ளார் மேலாளர். இதனால் மேலாளருக்கும் வீராவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி வீரா தனது கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிய சரக்கு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு பொத்தேரி பகுதி அவ்வையார் குப்பம் தெருவுக்கு சிலிண்டர் விநியோகம் செய்வதற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது கேஸ் ஏஜென்சி மேலாளர் சுகுமார், தனது நண்பர்கள் ஐந்து பேருடன் அந்த இடத்திற்கு வந்தவர், வீராவை வழிமறித்து என்னிடமே எதிர்த்துப் பேசுகிறாயா? என்று கோபமாக பேசியபடி சரமாரியாக அரிவாளால் வீசி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது சம்பந்தமான புகாரினை மறைமலை நகர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைறைவாக இருந்தவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், சுகுமார் தனது நண்பர்களான புதுச்சேரியைச் சேர்ந்த மணிகண்டன், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த தினகரன், பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த செல்வமணி ஆகியோருடன் நேற்று (16.05.2021) திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் தாயுமானவர் உத்தரவிட்டார். மேலும், அவர்கள் 4 பேரையும் திண்டிவனம் போலீசார் சிறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேர்களை மறைமலைநகர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களைப் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்றத்தில் மனு அளிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் மறைமலை நகர் போலீசார்.