கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகக் கடந்த 19ம் தேதி அன்று நடைபெற்ற 365ஆவது நாள் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய தலைவர்கள் மீது, தமிழகக் காவல்துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் த.செயராமன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட 26 பேர் மீது பந்தநல்லூர் காவல்நிலையத்தில், அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். பலரைத் தேடி வருகின்றனர். ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக தன்னெழுச்சியுடன் போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அறவழியில் கூட்டம் நடத்திய தலைவர்கள் மீதும், களப்போராளிகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள செயல், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என காவிரி உரிமை மீட்புக் குழு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.