விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் உள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்த ஊர் அமைந்துள்ளதால் புதுச்சேரி உட்பட தென் மாவட்டங்களுக்குச் சென்னையிலிருந்து வாகனங்கள் பரபரப்பாகச் செல்வதும் அதேபோல் சென்னைக்குச் செல்வதும் என எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்தச் சாலையில் புதுச்சேரியிலிருந்து அடிக்கடி மது கடத்தல் சம்பவங்கள் நடக்கும். இதைக் கண்காணித்து மதுவிலக்கு சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் மது கடத்தல் பேர்வழிகளை வாகனங்களுடன் மடக்கிப் பிடித்து வழக்குப் போடுவது வாகனங்களைப் பறிமுதல் செய்வது அவ்வப்போது தொடர்ந்து நடக்கும்.
அதன்படி மரக்காணம் மதுவிலக்கு போலீசார் மது கடத்தலில் பிடிபட்ட 28 வாகனங்களை நேற்று முறைப்படி பொது ஏலம் விட்டனர். இந்த வாகனங்களை ஏலம் எடுப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்படி ஏலம் விடப்பட்ட ஒரு காருக்கு உள்ளே மனித மண்டை ஓடு இருந்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மரக்காணம் போலீசார் கூறுகையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பட அகரம் கிராமப் பகுதியில் உள்ள ஒரு தைல மரக் காட்டில் அடையாளம் தெரியாத ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்தப் பெண்ணைப் பற்றிய விவரத்தைச் சேகரிப்பதற்காக அந்தப் பெண்ணின் தலையை எடுத்து ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிறகு வழக்கு விசாரணைக்காக அந்தப் பெண்ணின் மண்டை ஓட்டை காவல் நிலைய வளாகத்திலிருந்த அந்த காருக்குள் வைத்திருந்தனர். தற்போது ஏலம் விடப்பட்டபோது அந்த வாகனத்தைத் திறந்து பார்த்ததில் அதிலே மண்டை ஓடு இருப்பது தெரிய வந்துள்ளது. மற்றபடி இந்த மண்டை ஓடு காருக்குள் இருந்ததில் எவ்வித சந்தேகங்களும் இல்லை என்கிறார்கள் போலீசார்.