வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் வாக்குபதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணமாக, கதிர்ஆனந்த் வீட்டில் மற்றும் கட்சி நிர்வாகி வீட்டில் தேர்தலுக்காக வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்ட 10.5 கோடியே என தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக காரணம் சொல்லப்பட்டது. இது தொடர்பாக கதிர்ஆனந்த் மீது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கதிர்ஆனந்த்தே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளதால் அதை காரணம் காட்டி கதிர்ஆனந்த் மனுவை ரத்து செய்ய வைக்க மற்றொரு போட்டியாளரான ஏ.சி.சண்முகம் தரப்பு உட்பட சிலர் முயற்சித்து வருகின்றனர் என்கின்றனர் திமுகவினர்.
இந்நிலையில் கதிர்ஆனந்த்துக்கு மாற்றாக நிறுத்தப்படும் வேட்பாளர் தகுதியானவராக நிறுத்த வேண்டும். அதனால் மாற்று வேட்பாளரை சரியான ஆளாக போடுங்கள் என திமுக பொருளாளரும், கதிர்ஆனந்த் அப்பாவுமான துரைமுருகனிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் கட்சியினர் மத்தியில் உலாவிவந்தன.
இந்நிலையில் ஜீலை 17ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார் கதிர்ஆனந்த். மாற்று வேட்பாளராக கதிர்ஆனந்த் மனைவி சங்கீதாவே மனு தாக்கல் செய்துள்ளார். கதிர்ஆனந்த் மனு தள்ளுபடி செய்தால் சங்கீதாவே வேட்பாளர் என்கிறார்கள் துரைமுருகன் தரப்பில்.
கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின்போது, வருமானவரித்துறை கதிர்ஆனந்த்தை பிரச்சாரம் செய்யாமல் முடக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, தனது கணவருக்காக தீவிர பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியவர் சங்கீதா. அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என மாவட்ட எல்லையோரம் உள்ள மக்கள் பேசும் மொழிகளிளேயே இயல்பாக பிரச்சாரம் செய்தது திமுகவினரை மட்டுமல்ல பொதுமக்களையும் வெகுவாக ஈர்த்தது. அதனால் கதிர்ஆனந்த் மனு ரத்து செய்யப்பட்டால் சங்கீதாவையே வேட்பாளராக்குங்கள் என துரைமுருகன் அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
சட்ட வல்லுநர்களோ, தேர்தல் வழக்கு மட்டும்மே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணைக்கே வரவில்லை. அது விசாரணைக்கு வந்து தீர்ப்பில் தண்டனை கிடைத்தபின்பே மனு தள்ளுபடி, ஏற்பு என்கிற பிரச்சனை வரும். இப்போது வருவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள்.
ஆளும்கட்சி அதிகாரிகள் மூலமாக கதிர்ஆனந்த் மனுவுக்கு சிக்கல் ஏறுபடுத்தினால் அதற்கு வலுவான வாதங்களை வைக்க வேட்புமனு பரிசீலனையின்போது தங்கள் தரப்பின் வாதத்தை வைக்க மூத்த வழக்கறிஞர்களை அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளது திமுக. ஒருவேளை கதிர்ஆனந்த் மனு ரத்து செய்யப்பட்டால் கதிர்ஆனந்த் மனைவி சங்கீதாவே வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது.