சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ள பிளக்ஸ் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவுகளை போட்டு வரும் நிலையில் நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் ஆளுங்கட்சி அமைச்சர் மற்றும் திறப்பு விழாவிற்கு வந்த நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. பெயர்களை போட்டு அ.தி.மு.க வினரால் வைக்கப்பட்டிருந்த ஏராளமான பதாகைகளை பார்த்த நீதிபதி நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு பதாகைகளை அகற்றச் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட முதண்மை நீதிபதி ஜி.இளங்கோவன். மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திறப்பு விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை விழா தொடங்கும் முன்பு இலுப்பூர் வந்த மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.இளங்கோவன் வரும் வழிகளிலும், விழா நடக்கும் இடங்களிலும் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் வைத்திருந்த ஏராளமான பதாகைகளை பார்த்தவர் இப்படி சுற்றுச்சூழலையும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ள பதாகைகளை வைக்க கூடாது உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகு பதாகைகள் அகற்றப்பட்டது. அதன் பிறகு நடந்த விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி, ரிப்பன் வெட்டி நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.