நினைத்ததெல்லாம் எல்லோருக்கும் நடந்துவிடுவதில்லை. ஏதோ ஒரு விஷயத்தில், தொடர்ந்து ஏமாற்றமும் அலைக்கழிப்புமே மிஞ்சும். நாளடைவில், அதுவே விரக்தியாகிவிடும். ஏமராஜனின் பரிதவிப்பும்கூட, அந்த ரகம்தான்!
யார் இந்த ஏமராஜன்?
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஏமராஜன், பள்ளிப்படிப்பினைத் தாண்டாதவர். வயிற்றுப்பாட்டுக்காக எலக்ட்ரீஷியன் தொழில் பார்த்து வந்தாலும், பிடிப்பு என்னவோ எழுத்தும் சினிமாவும்தான்! 10 ஆண்டுகளுக்கு முன், ‘காதலின் மறுபக்கம்’ என்னும் தலைப்பில் புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உள்ளதெல்லாம், ஒவ்வொன்றாக நடந்து வருகிறது எனப் பட்டியலிடும் அவர், நடிகர் விஜய்யை மனதில் வைத்தே, அந்தக் கதை எழுதப்பட்டதாகச் சிலாகிக்கிறார்.
‘சுறா’ திரைப்படத்தின் தலைப்பைக்கூட, புரட்சிப்பூக்கள் புரொடக்ஷன் என்ற தனது கம்பெனியின் பெயரில், 2003-ல் பதிந்து வைத்ததாகவும், 2004-ல் மறுபதிவு செய்ததாகவும், ஏழ்மைச் சூழலில் பதிவைத் தொடராத நிலையில், 2010-ல் விஜய் நடித்த 50-வது படமாக சுறா வெளிவந்தது என்று பெருமூச்சுவிடும் ஏமராஜன், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், கடந்த 10 ஆண்டுகளாக விஜய்யை சந்திப்பதற்கு முயற்சித்து வருவதாகவும், தொடர்ந்து அதற்கு முட்டுக்கட்டையாக சிலர் இருந்துவருகிறார்கள் என்றும் வேதனையை வெளிப்படுத்தினார்.
“ஒருமுறை, அகில இந்திய விஜய் மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்திடம், விஜய்யை நேரில் சந்தித்து காதலின் மறுபக்கம் புத்தகத்தை அவர் கையில் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அப்போது, தனது இரண்டு செல்போன் நம்பர்களை, தன் கைப்பட எழுதிக்கொடுத்த புஸ்ஸி ஆனந்த், தற்போது நான் அழைத்தால் ‘அட்டென்ட்’ பண்ணுவதே இல்லை. ‘மரணம் என்னை ஜெயிப்பதற்கு முன் விஜய்யை ஒரு தடவையாவது சந்தித்துவிட வேண்டும்’ என்று கடிதம்கூட எழுதினேன். நோ ரெஸ்பான்ஸ். நான் மட்டுமல்ல, விஜய் மன்றத்தினரின் அழைப்பும்கூட, அவரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது..” என்று குறைப்பட்டுக்கொண்டார்.
எஸ்.ஏ.சந்திரசேகரும்கூட, ‘விஜய்யை சுற்றி சில விஷச்செடிகள் இருக்கின்றன. அதனால்தான் எனக்கும் விஜய்க்கும் இந்த அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுவிட்டது..’ என்று குற்றம் சாட்டிருந்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஏமராஜன் போன்றோரின் ஆதங்கம் குறித்து கேட்பதற்காக, அகில இந்திய விஜய் மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்தை தொடர்ந்து தொடர்புகொண்டோம். நமது லைனுக்கே வரவில்லை. குறுந்தகவலும் அனுப்பினோம். பதில் இல்லை.