80 கோடி ரொக்கம் பிடிபட்டதுடன், 435 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது. இதில், 80 கோடி ரொக்கம், 10 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கரூரைச் சேர்ந்த சிவசாமிக்கு சொந்தமான சோபிகா இம்பெக்ஸ் என்ற கொசுவலை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனம். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மிக சாதாரண முறையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தற்போது, தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு கொசுவலைகள் ஏற்றுமதி செய்யப்படும் மிக முக்கியமான நிறுவனம்.
இந்த நிறுவனம் கரூரில் வி.கே.ஏ பாலிமர்ஸ் மற்றும் சோபிகா இம்பெக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஆல்பா சைபர் மெத்ரின் என்ற ரசாயனக் கொசு வலைகளை ஐ.நாவின் விதிமுறைகளுக்குட்பட்டு தங்களது தயாரிப்புக் கூடங்களில் தயாரித்து, இந்தியாவிலே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மட்டுமே உரிமம் பெற்றுள்ளது. ஆனால் ஏற்றமதி ரக வேதிப்பொருள் கலந்த கொசுவலையை உள்ளூரில் விற்பனை செய்து வந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்படுவதால், மனிதர்களுக்கு ஒவ்வாமை, தோல் நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
கடந்த 2015 ஆண்டு சாதாரண கொசுவலை உற்பத்தியாளர் சங்கத்தலைவர் சுரேஷ்குமார் கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி திடீர் என வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் வருமான வரி சோதனை தொடங்கியது. தொழிற்சாலை, அலுவலகம், உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களில், 80- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரவு பகலாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
சோபிகா இம்பெக்ஸ் நிறுவனத்தில் இருந்து ஜாப் வொர்க் பெற்று கொசுவலை தயாரிக்கும் சிறிய அளவிலான நிறுவனங்கள் சிலவற்றிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை மாலை சிவசாமியின் வீட்டில், அலமாரியில் இருந்து 32 கோடி ரூபாய் ரொக்க பணமும், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் எடுக்கப்பட்டது. 4-வது நாளாக தொடர்ந்த சோதனை, இன்று காலை 10 மணிக்கு நிறைவுக்கு வந்தது. மொத்தம் 60 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மானியத்துடன் கோடிக்கணக்கில் நிதி உதவியுடன் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் பணத்தினை சுவற்றில் பதுக்கி வைத்திருந்ததை, எல்லாம் வருமானவரித்துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது, மதுரை, சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் வந்து சோதனை நடத்தியது குறிப்பிடதக்கது.