கரூர் மாவட்டம் வெங்கமேட்டில் அனைத்து வீடுகளுக்கும் 10 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.
ஊரடங்கு அறிவித்தது 26 நாட்களுக்குப் பிறகு இன்று உணவுப் பொருட்கள் தருவதற்கு ஏதாவது காரணம் உண்டா? முன்பே ஏன் கொடுக்கவில்லை என்று தனியார் தொலைக்காட்சி நிருபர் கேள்வி ஒன்றைக் கேட்டார்.
அமைச்சர் முகத்தில் மாஸ் அணிந்து இருந்தாலும் அவருடைய உக்கிர பார்வை மாஸ்கை மீறி அவருடைய குரலில் வெளிப்பட்டது. அந்தக் கடுமையான குரலில் ஊரடங்கு அறிவித்ததும் ரேசனில் 1000 ரூபாய் பணம், அரிசி இலவசமாகக் கொடுத்தோம். ஊரடங்கு அறிவித்ததும் உடனே பொருள் கொடுக்க முடியுமா? என்று எதிர் கேள்வி கேட்டார்.
உடனே அந்தத் தொலைகாட்சி நிருபர் விடாமல் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க டென்ஷன் ஆன அமைச்சர் என்ன கேள்வி இது.. ஏன் இன்னொருத்தர் கொடுத்திட்டு இருக்காரே அவர்கிட்ட கேளுங்களேன், நாங்க 15 நாளைக்கு முன்னாடி பிளான் பண்ணினோம், நேத்துல இருந்து ஒருத்தர் கொடுத்துக்கிட்டு இருக்காரே அவர்கிட்ட இந்தக் கேள்வியைக் கேளுங்க,
உடனே மீண்டும் நிருபர் ஏன் லேட்டா கொடுக்குறீங்க தான் கேக்குறோம் என்று விடாப்பிடியாகக் கேட்க உடனே அமைச்சர் குரலை உயர்த்து லேட்டா எல்லாம் கொடுக்கல, கரெக்டா தான் கொடுக்குறோம் என்று சொல்லிக்கொண்டே சீட்டை விட்டு எழுந்து லேட்டா கொடுத்தத நீங்க கண்டுபிடிச்சீட்டிங்களா? நீ தான் ஒவ்வொன்னையும் தப்பு தப்பாகப் போட்டுகிட்டே இருக்க, என்று ஒருமைக்கு மாறி கோவத்தின் உச்சத்திற்கே சென்றார்.
நிலைமை விபரீதம் ஆகிறது என்பதை உணர்ந்த நிருபர் அப்படியே கொஞ்சம் பின் வாங்க, அமைச்சரும் இதற்கு மேல் பேசினால் சிக்கல் என நினைத்தாரோ என்னமோ கூல் ஆகி…
அவர்கள் கூடத் தான் (செந்தில்பாலாஜி) ஒரு போன் நம்பரை போட்டுவிட்டுக் கூப்பிடுங்கள் பொருள் தருகிறோம் என்றார்கள். நீங்கள் செக் பண்ணி பாத்தீங்களா? இப்போதே செக் பண்ணுவோம், கூப்பிட்டால் எடுக்கிறார்களா? இதை எல்லாம் கேட்காமல் மக்களுக்கு நன்மை செய்வதை ஏன் என்று கேள்வி கேட்பதா? என்று சலித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
செய்தியாளரை மிரட்டிய சம்பவத்திற்குக் கரூர் எம்.பி. ஜோதிமணி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊடகவியலாளரை மிரட்டியதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். கரூரில் தானும் உணவு கொடுக்காமல் கொடுத்தவர்களையும் தடுத்தது அனைவரும் அறிந்ததே. கேள்வி கேட்பது அவர் கடமை. அதற்காக மிரட்டுவது ஒரு அமைச்சருக்கு அழகல்ல.
ஊடகவியலாளர்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து களத்தில் நிற்கிறார்கள். ஏற்கனவே இரு ஊடகவியலாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் அச்சமற்று களத்தில் நிற்கும் அவர்கள் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பிற்குத் தலைவணங்குகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.