தமிழக அரசு உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்க்க உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. அதுபோல் தான் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியாக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்படி நியமனம் செய்யப்பட்ட நடராஜன் தான் மாவட்டத்தில் கலப்பட பொருட்களை கண்டறிந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கி வருகிறார். திண்டுக்கல் நந்தவனப்பட்டி அருகே உள்ள மாடன் நகரில் சிவானந்த ஆலையில் கலப்பட எண்ணெய் தயாரிப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான நடராஜன் தலைமையிலான குழு அந்த ஆலையை அதிரடி சோதனை நடத்தியதில் நந்தினி என்ற பெயரில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் கலப்பட எண்ணெய் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கபட்டது.
உடனே அங்கிருந்த கலப்பட எண்ணெய் 150லிட்டர் மற்றும் கலப்பட எண்ணையை அடைத்து விற்க வைத்து இருந்த 21ஆயிரம் பாலிதீன் பைகளையும் பறிமுதல் செய்தார். இவற்றின் மதிப்பு 1 1/2 லட்சம் என அதிகாரி தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல் ஆலையையும் இழுத்து மூடி சீல் வைத்தார். அதேபோல் அப்பகுதியில் இருந்த வின்னர் எண்ணைய் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதிலையும் நடராஜன் தலைமையிலான குழு விசிட் அடித்து ஆய்வு செய்ததில் அங்கிருந்த 11 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெயை பறிமுதல் செய்து ஆலைக்கும் சீல் வைத்தார்.
அதே போல் திண்டுக்கல் நகரில் உள்ள ஆர்.எஸ்.ரோட்டில் இருந்த மணிமாறன் குடோனை அதிரடி சோதனை செய்ததில் பல்வேறு பெயர்களில 50கிலோ கலப்பட டீத்தூள் இருப்பதை கண்டு பிடித்து பறிமுதல் செய்தார்.இந்த கலப்பட டீ தூளில் செயற்கை கலப்பட நிறமூட்டி வேதிப் பொருட்கள் சேர்த்துள்ளதால் அந்த கலப்பட டீயை சாப்பிடும் மக்களுக்கு புற்று நோய் வரவும் வாய்ப்புள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான நடராஜன் தெரிவித்தார். அதைதொடந்து வேடசந்தூர், எரியோடு, கோவிலூர் போன்ற பகுதிகளிலும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை செய்து கணேஷ் குட்கா உள்பட போதை பொருள்களையும் பறிமுதல் செய்தார்.
இப்படி கலப்பட பொருட்களை ரெய்டு செய்ய அரசு வாகனங்களில் சென்றால் கலப்பட வியாபாரிகளுக்கு தகவல் தெரிந்துவிடும் என்பதால் இந்த உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான நடராஜன் தான் தலைமையிலான குழுவை வாடகை கார்மூலம் அழைத்து சென்றும், டூவிலர்கள் மூலம் சென்றும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால் கலப்பட வியாபாரிகள் கலங்கி போய் இருக்கிறிர்கள்.
இதுபற்றி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான நடராஜனிடம் கேட்டபோது... வியாபாரிகளும், கடைகாரர்கள் மற்றும் ஆலைகள் வைத்து இருப்பவர்கள் எல்லாம் கலப்பட பொருட்களான நெய், எண்ணெய், டீ தூள் விற்பதையும், தயாரிப்பதையும் தவிர்த்து அக்மார்க் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இப்படி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான நடராஜனின் அதிரடி நடவடிக்கையை கண்டு மாவட்டத்தில் உள்ள கலப்பட வியாபாரிகள் எல்லாம் அரண்டு போய் இருக்கிறார்கள்.