வீட்டு வரி, கடைகள், வணிக வளாகங்கள், Trade liecence, Provisional tax இவற்றை தாறுமாறாக உயர்த்தியுள்ளதாக வணிகர்கள் புகார் கூறுகின்றனர். மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்கள் பொது மக்கள், வியாபாரிகளிடம் பணம் வசூலிப்பதாக குற்றம் சாற்றப்படுகிறது. மேலும் வீடுகள், கடைகள், திருமண மண்டபங்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு குப்பை வார வரி என நோட்டிஸ் அனுப்பியும், நேரடியாக வீடுகளுக்கு சென்றும் பணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமியை வர்த்தகர்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர். நாராயணசாமி அதிகாரிகளை அழைத்து பேசுவதாக கூறினார். நாட்கள் சென்றதே தவிர முதல்வரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
எனவே புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (20-ஆம் தேதி) 24 மணிநேர கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் கடையடைப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக சனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது.
அப்போது நாளை புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு மண்டலங்களிலும் 24 மணி நேர முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரையரங்கு உரிமையாளர்களும் நாளை இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
- சுந்தரபாண்டியன்