கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பகலில் பல்லக்கிலும் இரவில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்பாளும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 5 ஆம் நாள் விழாவாக கடந்த 29 ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கல இசையுடன் சுரும்பார் குழலி உடனுறை சமேத ரத்தினகிரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் 8 ஆம் நாள் விழாவாக குதிரைத் தேர் விழா நடைபெற்றது. முக்கிய விழாவான இன்று புதன்கிழமை காலை திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தேர் ஏறும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்வாமி ஊர்வலமாக திருத்தேருக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடிக்கும் விழா நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க அரோகரா முழக்கத்துடன் திருத்தேர் புடை சூழ வடம் பிடிக்கப்பட்டது.
இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவை முன்னிட்டு தண்ணீர் பந்தல்கள் அன்னதானம் பல்வேறு பகுதியில் நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை கோவில் நிர்வாகம் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.