தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்தார்.
2023 -2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் நிதியமைச்சர் முன்வரிசையில் நின்று படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிதியமைச்சர் தனது உரையைத் துவங்கும் போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எனினும் நிதியமைச்சர் தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார்.
இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ஒதுக்கிய பட்ஜெட் குறித்து பேசிய நிதியமைச்சர், “சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை இந்த அரசு அமைக்கும். இதற்காக பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வசதிகளுடன் கூடிய சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை விரிவாகச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.