அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன், மாவட்ட நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரோனா தடுப்புக்காக 1 கோடியே, முன்று இலட்சத்து, எழுபத்தோராயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு ரூபாய் (1,03,71,888) நிதி ஒதுக்க பரிந்துரை செய்தார். இதற்கு இடையில் கரூர் மாவட்ட அரசு மருத்துமனைக்கு 10 வென்டிலேட்டர் தேவை என்பதை அறிந்து உடனடியாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 வென்டிலேட்டர் வாங்குவதற்கு 60,00,000 நிதி ஒதுக்கி 27.03.2020 அன்று கலெக்டருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதே போன்று கரூர் எம்.பி. ஜோதிமணி தொகுதி நிதியிலிருந்து 10 வென்டிலேட்டர் வாங்குவற்கு ரூபாய் 60,00,000 நிதி ஒதுக்கி கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிக்கு நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டு, பின்னர் நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட கலெக்டரிடம் இருந்து மின் அஞ்சல் செந்தில்பாலாஜிக்கு அனுப்பப்பட்டது. அக்கடிதத்தில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே சட்டமன்ற நிதி பயன்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துமனையில்தான் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் வென்டிலேட்டர் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையினாலும், அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று நலம் அடைவேண்டும் என்கிற எண்ணத்திலும், வென்டிலேட்டர் வாங்க கொடுக்கப்பட்ட பரிந்துரை கடிதத்திற்கு, நிர்வாகம் அனுமதி வழங்கி உடனே வென்டிலெட்டர் கொள்முதல் செய்து கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று செந்தில்பாலாஜி தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கரோனா நோயால் பாதிக்கப்பட்ட அவரது தொகுதி மக்கள் அங்குதான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிதி ஒதுக்கீட்டை முதலில் ஏற்றுக் கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உயிர்காக்கும் நேரத்திலும் அரசியல் சூழ்ச்சிகளில் அதிமுக அரசு செயல்படுவது சரியல்ல. முறையான அனுமதி வழங்கி மக்களைக் காக்குமாறு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.