![karur all india women basketball event](http://image.nakkheeran.in/cdn/farfuture/wGdK2jdORn6u0Z8ul2-uVLT6AHj2UyCgt32mLthOcwE/1676109149/sites/default/files/inline-images/basket-art.jpg)
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பி.என்.ஐ. இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு அகில இந்திய பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி 8ம் தேதி தொடங்கி தொடர்ந்து பகல் இரவு நேர ஆட்டமாக நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அளவில் 12 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. போட்டிகள் லீக் அவுட் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்று வருகிறது.
மூன்றாம் நாளான இன்று காலை நடைபெற்ற போட்டியில் முதலில் சென்னை எத்திராஜ் கல்லூரி அணியும், சென்னை எஸ்பிசி அணியும் மோதியது. இந்தப் போட்டியில் 57க்கு 21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை எஸ்பிசி அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து இன்று மாலை நடைபெற்ற போட்டியில் சென்னை ஓசேன் அணியும், கேரளா ஈ.பி. அணியும் மோதியது. இந்த போட்டியில் கேரளா ஈ.பி. அணி 90க்கு 41 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சென்னை எத்திராஜ் கல்லூரி அணியும், கேரள தென்மேற்கு ரயில்வே அணியும் மோதியது. இந்தப் போட்டியில் கேரளா தென்மேற்கு ரயில்வே அணி 81க்கு 41 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று இறுதியாக நடைபெற்ற போட்டியில் சென்னை தெற்கு ரயில்வே அணியும், கேரள போலீஸ் அணியும் மோதியது. கடுமையாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 55க்கு 54 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கேரள போலீஸ் அணி வெற்றி பெற்றது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.