தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாதமாக நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. இந்நிலையில், இன்று (07.09.2021) அவை கூடியதும் 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. விவாதத்தில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுவருகிறார்கள்.
இந்த விவாதத்தில் சென்னை எழும்பூர் தொகுதி திமுக உறுப்பினர் பரந்தாமன் கலந்துகொண்டு பேசும்போது, “எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஏற்கனவே சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெயர் மாற்றம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று என்பதால் மாநில அரசு இதில் பரிந்துரை மட்டுமே செய்ய இயலும்.