கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்ட் அமைப்பை சோ்ந்த ரூபேஷ், சைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 போ் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனர்.
இதில் சைனா ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் மற்றவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் 72 வயதான வீரமணி மீது தமிழகம் மற்றும் கேரளாவில் போடப்பட்டு இருந்த 7 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தது.
இதனையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்து வீரமணி வெளியே வந்தார். ஈரோட்டில் தங்கியிருத்து தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கோவை மத்திய சிறையில் இருந்து மாவோயிஸ்ட் வீரமணி வெளியே வந்தபோது, மாவோயிசம் என்பது எனது கருத்துரிமை, அதை யாராலும் நசுக்க முடியாது எனவும், கரோனாவை அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்காக கட்டுப்படுத்தாமல் இருப்பதாக கூறினார்.
சிறைகளில் அடைப்பதால் கருத்துகளை மறைத்துவிட முடியாது எனவும் வீரமணி தெரிவித்தபோது, அவரை உடனடியாக ஆட்டோ பிடித்து காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.