கோயில்களைப் புனரமைப்பதாகக் கூறி 44 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடிக்கு அருகே மிட்டனமல்லியில் ஸ்டூடியோ வைத்துள்ள கார்த்திக் கோபிநாத், பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் இரண்டு கோயில்களைப் புனரமைப்பதாகக் கூறி, பணம் வசூலித்து மோசடி செய்ததாக ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒரு கோயிலான மதுரை காளியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.
வசூலித்த பணத்தை ஒப்படைக்குமாறு ஏற்கனவே கார்த்திக் கோபிநாத்திற்கு மதுரை காளியம்மன் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், பணத்தை ஒப்படைக்காததால் கோயில் நிர்வாகம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தது. இதே குற்றச்சாட்டை முன்வைத்து சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆவடியில் உள்ள வங்கிக் கணக்கின் மூலம் பணம் வசூலித்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.