Skip to main content

“தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என்ற மனநிலை கர்நாடகத்திற்கு இல்லை” - அமைச்சர்  துரைமுருகன்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Karnataka is not in the mood to give water to Tamil Nadu  Minister Duraimurugan

 

டெல்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை  தாங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

முன்னதாகத் தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிற்கு பிறகு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்ட அனைவரும் கட்டுப்படவேண்டும் என்பது நியதி. உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஒவ்வொரு மாதமும் கர்நாடகா காவிரியில் எவ்வளவு நீரைத் திறந்து விட வேண்டும் என்றும் அந்த நீரை பில்லிகுண்டில் அளவீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. அதன்படி 2023 ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11 ஆம் தேதி வரையில் கர்நாடகா 53.7703 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும்.ஆனால் கர்நாடக அரசு வழங்கி இருப்பதோ வெறும் 15.7993 டி.எம்.சி தான். ஆக நமக்கு ஏற்பட்டிருக்கிற பற்றாக்குறை 37.9710 டி.எம்.சி. இதன் காரணமாக தஞ்சை தரணியில் காவிரி நீரை எதிர்பார்த்து நிற்கிற பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

 

தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள். எனவே நிலைமையை உணர்ந்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் விரைந்து செயல்பட வேண்டும் என்றும், அவர்கள் தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெற்றுத்தர கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, நான் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இரண்டு முறை சந்தித்தேன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் மோடிக்கும் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் கடிதங்களை எழுதி நிலைமைகளை விளக்கி இருந்தார். ஆனாலும், அந்த இரண்டு அமைப்புகளும் உடனடியாக தன் பணிகளை ஆற்ற முன்வராமல் போனது மிகவும் வருத்தத்திற்குரியது.

 

இறுதியாக நம்முடைய வற்புறுத்தலுக்கு இணங்கி கடந்த 10 ஆம் தேதி (10.8.2023) நடந்த காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டத்தில் நாள் ஒன்றுக்கு 15,000 கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு விடுவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று (11.8.2023) நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இது குறித்து 3 மணி நேரத்திற்கு மேல் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அக்கூட்டத்தில் தமிழகத்தின் நீர் தேவை கடுமையாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் கர்நாடகா சார்பில் வழக்கம் போல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு 15,000 கன அடி அல்ல 8,000 கனஅடி மட்டும் தான் அதுவும் ஆகஸ்ட் 22 வரையில் தான் தர முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாத நிலைப்பாடு உள்ளதா என்றால் அப்படி அல்ல கர்நாடகாவில் இருக்கிற நான்கு அணைகளையும் சேர்த்து மொத்த கொள்ளளவான 114.571 டி.எம்.சி.யில் 93.535 டி.எம்.சி. தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அதாவது கர்நாடகாவின் மொத்த இருப்பில் 82 சதவிகிதம் தண்ணீர் கர்நாடக வசம் இருப்பில் இருக்கிறது.

 

நீர் இல்லை என்ற நிலை கர்நாடகத்திற்கு இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என்ற மனநிலையும் கர்நாடகத்திற்கு இல்லை. இந்த போக்கு இன்று நேற்றல்ல காவிரி வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும். காவிரியில் கர்நாடகா - தமிழ்நாடு பிரச்சினை என்றைக்குத் தோன்றியதோ அன்றையிலிருந்து இந்த நிலையைக் கர்நாடக அரசு எடுத்து வருவது வருத்தத்திற்குரியது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் உள்ளம் நமக்கு. பயிர்கள் காய்ந்தாலும் கவலை இல்லை என்ற உள்ளம் கர்நாடகத்திற்கு. எனவே, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் போவதைத் தவிர வேறு வழியில்லை. விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நீதி வென்று நீரை பெற்று தருவோம் என்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி உறுதியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்