கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிவாஜி நகரில் ஐஎம்ஏ நிதி நிறுவனம் கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை முகமது மன்சூர்கான் என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தொகை குறிப்பிட்ட காலத்தில் முதிர்வடையும்போது, அத்தொகைக்கு உரிய வட்டியும், அத்தொகைக்கு நிகரான தங்க நகைகளும் வழங்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியானது.
இதை நம்பிய பலர், போட்டிக்கொண்டு ஐஎம்ஏ நிதி நிறுவனத்தில் முதலீடுகளைக் கொட்டினர். ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 76 ஆயிரம் பேர் முதலீடு செய்திருந்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தபடி முதலீட்டுத் தொகை, வட்டி, நகைகள் வழங்காமல் நிறுவனம் ஏமாற்றியது.
மொத்தம் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் குவிந்த முதலீடுகளை மோசடி செய்துவிட்டு நிறுவன அதிபர் முகமது மன்சூர்கான் துபாய்க்கு தப்பி ஓடிவிட்டார். இந்த மோசடி வழக்கு குறித்து கர்நாடகா மாநில சிறப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, துபாயில் இருந்து மோசடி மன்னன் முகமது மன்சூர்கான் இந்தியா திரும்பினார். அவர் உள்பட இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த மோசடியில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்கள், சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்து, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, பெங்களூரு, சேலம், கார்வார், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள 5 பேரின் வீடுகளில் நேற்று (டிச. 30) காலை முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பெங்களூரு வருமான வரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வரும் சவுரவ்நாயக், சொத்து மதிப்பீடு பிரிவில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் சேலம் அழகாபுரம் பெரியசாமி நகரைச் சேர்ந்த குமார், இடைத்தரகர்கள் ஆசிஸ் ஜெயின், கிரண் பளேஷ், கைசல்பாட்சா ஆகிய ஐந்து பேரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சிபிபி அதிகாரிகளில் ஒரு குழுவினர், சேலம் அழகாபுரம் பெரியசாமி நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் வசிக்கும் பெங்களூரு வருமானவரித்துறை உதவி ஆணையர் குமார் வீட்டில் நேற்று அதிகாலை முதல் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சில முக்கிய தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
சிபிஐ அதிகாரிகள் சோதனை முடிந்த பிறகு, பத்திரிகையாளர்கள் குமார் வீட்டுக்குச் சென்றபோது அவருடைய வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர் வெளியூர் சென்று விட்டதாக அருகில் உள்ளவர்கள் கூறினர்.
குமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட தஸ்தாவேஜூகள், அவருக்கும் ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடிக்கும் உள்ள தொடர்பு குறித்து கேட்டபோது சிபிஐ அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.