
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது அரசுப் பேருந்து. திருமயம் அருகே உள்ள பாம்பாற்று பாலம் அருகே வந்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேபோல், இரு சக்கர வாகனம் மீது மோதிய பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, பேருந்தில் பயணித்த 40- க்கும் மேற்பட்டோர் பத்திரமாக பேருந்தில் இருந்து வெளியேறியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. குறிப்பாக, பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பேருந்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயை முழுவதும் அணைத்தனர். இருப்பினும், பேருந்து முழுவதும் எரிந்து தீக்கரையானது.
மேலும், உயிரிழந்த இருவரின் உடல்களையும் திருமயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அதேபோல், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து காரணமாக, திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.