இன்னொரு பொள்ளாச்சி சம்பவமாக வெடித்திருக்கும் கன்னியாகுமரி காமுகன் சுஜி என்கிற காசியின் விவகாரத்தில் வழக்கம்போல விஷயத்தை மூடிமறைப்பதற்கான வேலையில் ஆளுந்தரப்பு தீவிரம் காட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக 90 க்கும் மேற்பட்ட இளம்பெண்களைக் காம வேட்டையாடிய சுஜி தற்போது நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவன்மீது குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. சுஜியின் கூட்டாளிகளான வி.ஐ.பி. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களைக் காத்துக்கொள்ள ஆளுந்தரப்பையும், காவல்துறை உயரதிகாரிகளையும் கரன்சியைக் கொடுத்து கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதனால்தான், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான நாகர்கோவில் ஏ.எஸ்.பி. ஜவஹரின் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்த நிலையில், நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சுஜியை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது புகைப்படம் எடுக்கும் பத்திரிகையாளர்களைப் பார்த்து தனது இரு கைகளால் 'ஹார்ட் சிம்பல்' வைத்து காட்டியுள்ளான். கையில் விலங்குடன், காவலர்கள் புடைசூழ இருந்தபோதே சுஜி இவ்வாறு செயல்பட்டுள்ளது பொது மக்கள் மத்தியிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொது வெளியில் எந்தக் கவலையும் இல்லாமல் இப்படிச் சிக்னல் கொடுக்கும் இவன் சிறையில் எப்படி இருப்பான். இவன் இந்தளவுக்கு நடந்து கொள்ள ஆளுங்கட்சி துணை போகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.